பித்தப்பை
பித்தப்பை என்பது வயிற்றின் வலது பக்கம் மேல் பகுதியில் வலது புற கல்லீரலின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும் ஒரு உறுப்பு ஆகும். இந்த உறுப்பு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் 30 முதல் 50 மில்லி லிட்டர் பித்தநீரை சேமித்து வைக்கின்றது. இந்த உறுப்பின் மிக முக்கியமான வேலை என்னவென்றால் கொழுப்புச்சத்து மிகுந்த உணவுக்கு பிறகு பித்த நீரை முன் சிறு குடலுக்கு வெளியேற்றுவது ஆகும். இந்த பித்தப்பை தான் பித்தப்பை கல் உருவாகும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவான பித்தப்பை நோய் பாதிப்பான பித்தப்பை கற்கள் பித்தப்பையை பாதித்தால் பித்தப்பை அகற்றுதல் தேவைப்படலாம். பித்தப்பை அகற்றிய பிறகும் மனிதன் சாதாரணமான உணவு பழக்கத்துடன் வாழ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. வயிற்றின் வலது பக்கம் அமைந்திருக்கும் இந்த பித்தப்பை ஒரு சிறிய பேரிக்காய் வடிவ பை போன்ற உறுப்பாகும். இந்த பித்தப்பை, வலது புற கல்லீரலின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. மற்றும், பித்தப்பையின் ஒரு குறிப்பிட்ட பகுதி கல்லீரலால் மூடப்பட்டிருக்கும் சில நேரங்களில் பித்தப்பை பித்தப்பையின் மெசன்ட்ரி என்னும் உறுப்பின் மூலமாக கல்லீரலின் அடிப்பகுதியில் இருந்து தொங்குகின்றது, பித்தப்பையையும் கல்லீரலின் ஒரு பகுதியையும் இணைக்கும் பகுதி பித்தப்பை ஃபோசா என்று அழைக்கப்படுகின்றது.
கல்லீரலில் இருந்து உருவாகும் பித்தநீரை முன் சிறு குடலுக்கு எடுத்துச் செல்வது பித்த குழாய் ஆகும். பித்தப்பை ஆனது பித்த குழாயின் வலது பக்கம் இணைக்கப்பட்டிருக்கும் வலது புற மற்றும் இடது புற கல்லீரலில் இருந்து வரும் பித்த குழாய்கள் இணைந்து மேல் பொது பித்த குழாயை உருவாக்குகின்றன. இந்த மேல் பொது பித்தக் குழாயுடன் பித்தப்பையின் சிஸ்டிக் குழாய் இணைந்து கீழ் பொது பித்தக் குழாய் உருவாகி அது கணைய குழாயுடன் இணைந்து முன் சிறு குடலின் பொதுப் புள்ளியில் திறக்கின்றது. பித்தப்பையில் தேங்கி இருக்கும், பித்த நீர் சிஸ்ட்டிக் குழாய் என்னும் பித்தப்பை குழாய் வழியாக பித்தக் குழாயை அடைந்து பின் முன் சிறு குடலை அடைகின்றன. பித்தப்பைக்கு ஃபண்டஸ் என்னும் தலைப்பகுதி, உடல் பகுதி, ஹார்ட்மேனின் பையுடன் கூடிய இன்பன்டிபுலம் மற்றும் பித்தப்பை குழாய் போன்ற பகுதிகள் உள்ளன. ஹார்ட்மேனின் பை என்பது பித்தப்பை குழாய்க்கும் பித்தப்பையின் உடற்பகுதிக்கும் இடையில் இருக்கும் ஒரு பகுதியாகும். இது வலது கல்லீரலில் குழாயுடன் நெருக்கத்தில் இருப்பதால் பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையின் போது சில சமயங்களில் வலது கல்லீரல் பித்த குழாயில் பாதிப்பு ஏற்படலாம். பொதுவாக பித்தப்பை குழாய் பித்தக் குழாயுடன் செங்குத்தாக இணைகிறது. ஆனால் சில சமயங்களில் பித்தப்பை குழாய் பொது பித்தக்குழாயின் இடது பக்கமாகவோ அல்லது சாய்வாகவோ, அல்லது முன் புறமாகவோ அல்லது பித்த குழாயின் கீழ் பகுதியிலோ இணையலாம். சில சமயம் வலது மற்றும் இடது கல்லீரல் பித்த குழாய்கள் சங்கமிக்கும் இடத்தில் கூட இணையலாம். பித்தப்பை குழாய் பித்த குழாய் இணையும் இடத்தின், மேற்பகுதியை மேல் பொது பித்தக் குழாய் என்றும் பித்த குழாய் செருகலுக்கு கீழே உள்ள பித்த குழாயை, கீழ் பொது பித்தக் குழாய் என்று அழைக்கிறோம். பித்தப்பை குழாயின் நீளம் சுமார் 1 முதல் 5 சென்டிமீட்டர் ஆகும். பித்தப்பை குழாயில் ஹெய்ஸ்டர் என்னும் சுழல் மீத மென் சவ்வுகள் உள்ளன. இது பித்தப்பையின் வால்வு பகுதியாகும். பொதுவாக பித்த குழாயை முன் சிறு குடலுக்கு மேற்பகுதி முன் சிறு குடலுக்கு பின்பகுதி, மற்றும் கணையத்தின் உட்பகுதி என மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். பொதுவாக பித்த நாளத்தின் உள்கணைய பகுதியானது, ஓடியின் ஸ்பிங்கடர் எனப்படும், வால்வால் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக, பித்தக் குழாயின் கீழ் பகுதி பிரதான கணையக் குழாயுடன் இணைந்து வாட்டரின் ஆம்பூலா எனப்படும், முன் சிறு குடலின் இரண்டாம் பகுதியில் உள்ள பொதுப் புள்ளியில் திறக்கிறது.
கேலோட்டின் முக்கோணம்
கேலோட்டின் முக்கோணம் என்பது, பித்தப்பை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அமைப்பாகும். இந்த முக்கோணத்தை கல்லீரலின் அடிப்பகுதி ஒரு பக்கத்தையும், பித்தப்பை குழாய் கீழ் பக்கத்தையும், மேல் பொது பித்தக் குழாய் இன்னொரு பக்கத்தையும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த முக்கோணத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் பித்தப்பைக்கு ரத்தம் வழங்கும் பித்தப்பை தமனி வலது கல்லீரல் தமனியில் இருந்து உருவாகி இந்த முக்கோணத்தின் வழியாக பித்தப்பையை அடைகின்றன. முக்கியமாக பித்தப்பை அறுவை சிகிச்சையின் போது பித்தப்பை தமனியை கட்டுப்படுத்தும் போது, வலது கல்லீரலில் தமனி காயமடையும் அபாயம் உள்ளது. கேலோட்டின் நிணநீர் முடிச்சு எனப்படும் “லுன்டு” எனப்படும் முடிச்சு இந்த முக்கோணத்தில் பித்தப்பை தமனியின் மேல் அமர்ந்திருக்கும். இந்த நிணநீர் முடிச்சுக்கு மூன்று முக்கியத்துவங்கள் உள்ளன, இந்த நிணநீர் முடிச்சின் அடியில் பித்தப்பை தமனி உள்ளது பித்தப்பையில் அலர்ஜி ஏற்பட்டால் இந்த நிணநீர் முடிச்சின் அளவு பெரிதாகின்றது. மேலும், பித்தப்பையில் ஏற்படும் புற்று வியாதியின் போதும் இந்த நிணநீர் முடிச்சின் அளவு பெரிதாகிவிடும்.
பித்தநீர் சுரப்பு
பித்தநீரானது கல்லீரலின் ஹெபடோசைடுகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. பித்த நீரின் உற்பத்தி பித்தப்பையால் அல்ல என்பது கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான ஒன்றாகும். உடலில் உள்ள பித்த நீருக்கு இரண்டு முக்கிய வேலைகள் உள்ளன. முதலாவதாக உடலில் நடக்கும் வளர்ச்சிதை மாற்றங்களால் மிஞ்சும் நச்சுப் பொருள்கள் ரத்தத்தில் கலந்து அவை கல்லீரலால் பித்த நீர் வழியாக வெளியேற்றப்படுகின்றன. எனவே பித்த நீர் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும் முக்கிய வேலையை செய்கின்றது. இரண்டாவதாக உணவில் உள்ள பெரும்பாலான கொழுப்புச் சத்துக்கள் மற்றும் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உட் கிரகிப்பதில் பித்த நீரில் உள்ள பித்த உப்புக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பித்த நீர், கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள் உட் கிரகிப்புகளை அதிகரிப்பதால் வைட்டமின் ஏ, டி ,இ , மற்றும் கே போன்ற கொழுப்புகளில் கரையும் வைட்டமின்களை உட்கிரகிக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. பித்த நீரானது அதன் உணவு செரிமான செயல்பாடு தவிர பித்தமானது ஹீமோகுளோபின் மற்றும் மையோ குளோபின் சிதைவு பொருளான,
“பிலிருபினை” வெளியேற்ற உதவுகின்றது பிலிருபின் மற்றும் அது சார்ந்த நிறமிகள் ரத்தத்தில் உள்ள “ஆல்புமின்னுடன்” இணைக்கப்பட்டு ரத்தத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. இதை மறைமுக பிலுருபின் என்று அழைக்கப்படுகிறது.
இந்த மறைமுக பிலுருபின் கல்லீரலின் ஹெபட்டோசைட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு ஹெபட்டோசைட்டுகளால், குளுக்குரோனைடுகளுடன் இணைந்து பிலுருபின் குளுக்குரோனைடுகளை உருவாக்குகின்றன. இது நேரடி பிலுருபின் என்று அழைக்கப்படுகிறது.
பித்தப்பை என்பது கல்லீரலின் வெளிப்புறம் உள்ள பித்தநீரை சேமிக்கும் ஒரு பை போன்ற உறுப்பாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுமார் “30 முதல் 50” மில்லிலிட்டர் பித்த நீர் தேங்கி இருக்கும். இந்த தேங்கியிருக்கும், பித்த நீர் உணவுக்கு பின் குறிப்பாக கொழுப்பு சத்து மிகுந்த உணவுக்கு பின், பித்தப்பையின் சுருங்கி விரியும் தன்மையால் பித்த குழாய் வழியாக முன் சிறு குடலுக்கு வெளியேற்றப்படுகின்றது. பித்தப்பையில் தேங்கி இருக்கும் பித்த நீர் உணவின் தரத்தை பொறுத்து வெளியேற்றப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பித்தநீரில் உள்ள பிலிருபின் என்னும் நிறமி இரத்த சிவப்பணுக்களின் சிதைவினால் உற்பத்தியாகின்றன. பித்த நீரில் பிலுருபின் உடன் பித்த அமிலங்கள், பித்த உப்புக்கள், பாஸ்போலிப்டுகள், கொலஸ்ட்ரால் மற்றும் மின் அயனிகளுடன் நீரும் உள்ளது. கோலிக் அமிலம் மற்றும் டிஆக்ஸி கோலிக் அமிலம் என்பவை பித்த நீரில் இருக்கும் பித்த அமிலங்கள் ஆகும். கல்லீரலில் இருக்கும் ஹைபோடோசைட் எனும் உயிரணுக்கள் கொலஸ்ட்ராலில் இருந்து இந்த பித்த அமிலங்களை உருவாக்கி கல்லீரலில் உள்ளிருக்கும் பித்த நாளங்களுக்கு அனுப்புகின்றன. பொதுவாக கல்லீரலில் உருவாகும், பித்த உப்புக்களின் அளவு மிகக் குறைவே கல்லீரலில் உருவாகும் பித்த உப்புக்கள் பித்த நீருடன் கலந்து பித்த குழாய் வழியாக முன் சிறு குடலை அடைகின்றன. இந்த பித்த உப்புக்கள், சிறு குடலினுள் சென்று கொழுப்புச் சத்து மிகுந்த உணவினை ஜீரணிக்க உதவுகின்றன. உணவில் இருக்கும் கொழுப்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ, டி, இ, கே உடன் பித்த உப்புக்களும் உட்கிரகிக்கப்படுகின்றன. இவ்வாறு உட்கிரகிக்கப்பட்ட பித்த உப்புக்கள் ஆல்புமின் என்ற புரதத்துடன் சேர்ந்து கல்லீரலை அடைகின்றன. இந்நிகழ்வு என்ட்ரோஹபாட்டி சுழற்சி என அழைக்கப்படுகின்றன. எனவே 5சதவீதத்திற்கும் குறைவான பித்த உப்புக்களே மலத்துடன் வெளியேறுகின்றன. இந்த என்ட்ரோஹபாட்டி சுழற்சி நிகழ்வினால் பெரும்பாலான பித்த உப்புக்கள் சேமிக்கப்படுகின்றன. இதனால் கொழுப்பு சத்துக்களை உட் கிரகிக்கும் வேலை மிக இதமாக நடைபெறுகின்றன. உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் ஒரு பகுதி பித்த நீராக வெளியேற்றப்படுகின்றன பொதுவாக பித்த நீர் காரத்தன்மை கொண்டதாகும்.
கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரும் பித்தநீர் ஓட்டத்தின் ஒரு பகுதியும் தன்னிச்சையாக நடக்கும் நிகழ்வு ஆகும். ஆனால், நரம்புகளின் தூண்டுதல், இயக்கு நீரின் ஆதிக்கம் மற்றும் உணவில் உள்ள பொருள்கள் குறிப்பாக கொழுப்பு சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் பித்த நீர் உற்பத்தியையும் பித்த நீர் ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகின்றன. ஜீரண மண்டலத்தில் உள்ள ஹார்மோன்களும் வேஹஸ் என்னும் நரம்பின் தூண்டுதலும், அதிக பித்த நீர் உற்பத்தியையும் பித்த நீர் ஓட்டத்தையும் சீரமைக்கின்றன. சிறு குடலில் இருக்கும் சீதமென் சவ்வு கோலிசிஸ்டிக்டோக்கனின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கின்றது. இந்த கோலிசிஸ்டிக்டோக்கன் என்ற ஹார்மோன் பித்தநீர் உற்பத்தியை அதிகரிப்பதோடு பித்தப்பையையும் சுருங்கி விரிய வைக்கின்றது. எனவே கோலிசிஸ்டோகனின் என்னும் ஹார்மோன் அதிக அளவில் பித்த நீர் முன் சிறு குடலுக்கு வருவதற்கு உறுதுணையாக இருக்கின்றது. கோலிசிஸ்டோகனின் ஹார்மோனால் உருவாகும் பித்தப்பை சுருங்கி விரியும் தன்மையால் பித்தப்பையினுள் அதிக அழுத்தம் உருவாகின்றது. பித்தப்பையின் வாய்பகுதியில் பித்தப்பை கற்கள் அடைக்கும் போது கோலிசிஸ்டோகனின் ஹார்மோனால் உருவாகும் பித்தப்பை உள் அழுத்தம் சுமார் 300 மில்லி மீட்டர் மெர்குரியை அடையும் வேஹஸ் நரம்பு தூண்டப்படுவதாலும் இதே போன்ற மாற்றங்கள் நடக்கின்றன. ஆனால் பித்தப்பை சுருங்கி விரியும் தன்னை சற்று குறைவாகவே இருக்கும். கோலிசிஸ்டோகனின் என்ற ஹார்மோன் பித்தப்பையை சுருங்கி விரிய வைப்பதோடு பித்தக் குழாய் முன் சிறு குடலை அடையும் இடத்தில் இருக்கும், ஓடியின் வால்வு பகுதியை தளர்த்துகின்றது. இந்த பித்தப்பை சுருங்கி விரியும் தன்மையோடு ஒடியின் வால்வு தளரும் தன்மையும் ஒருங்கிணைந்து நடைபெறுவதால் கோலிசிஸ்டோகனின் உற்பத்தியாகும் இரண்டு மணி நேரத்திற்குள் பித்தப்பையில் இருக்கும் சுமார் 70% பித்த நீரை வெளியேற்றுகின்றது. பித்த குழாய் முன் சிறு குடலை அடையும் இடத்தில் முன் சிறு குடலின் சுவர் வழியாக சாய்வாக செல்கின்றது. இந்த சாய்ந்த பாதை மற்றும் ஓடியின் வால்வு செயல்பாடுகள் உணவு உண்ணாமல் இருக்கும்போது பித்த நீர் முன் சிறு குடலுக்குள் செல்லுவதை தடுக்கின்றது. பொதுவாக செயலிழந்த பித்தப்பை மற்றும் பித்தப்பையில் வரும் நுண்ணுயிரின் தாக்கங்கள் பித்தப்பையில் கற்கள் உருவாக காரணமாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. மேலும் பித்தப்பையில் கற்கள் இருந்தால் பித்தப்பை செயலிழந்து விட்டன என கருதப்படுவதால் பித்தப்பை கல் பாதிக்கப்பட்டவருக்கு பித்தப்பை கல் அகற்று அறுவை சிகிச்சை தேவை என கருதப்படுகின்றது.
சில சமயங்களில் சிறு குடலில் ஏற்படும் நோயால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சிறு குடல் அகற்றப்பட்டாலோ, அல்லது சில குறிப்பிட்ட வியாதிகளால் சிறுகுடலின் சீதமென் சவ்வு அதிகமாக பாதிக்கப்பட்டாலும் பித்த உப்புக்களின் உட் கிரகிப்பு குறையலாம். இவ்வாறு பித்த உப்பின் உட்கிரகிப்பு குறையும் தருணத்தில் கொழுப்பு சத்து மிகுந்த உணவை உட்க்கிரகிக்கும் தன்மை குறைவதோடு கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் உட் கிரகிப்பும் குறைய வாய்ப்புள்ளது. இதனால் உடலுக்கு தேவைப்படும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களின் அளவு குறைய வாய்ப்புள்ளது.
Your email address will not be published. Required fields are marked *