blog-post-image

இ ஆர் சி பி என்னும் எண்டோஸ்கோபிக் பித்தக் குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாய் வடிக்குழாய் பொருத்துதல்

Posted on 2025-05-20 16:54:36 by Dr. Sathish

ஆர் சி பி என்னும் எண்டோஸ்கோபிக் பித்தக் குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் பித்த குழாய் வடிக்குழாய் பொருத்துதல்

இந்த சிகிச்சை முறை பித்தப்பை கல் உடன் பித்தக் குழாய் கற்கள் இருப்பவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றது. எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் பித்தக்குழாய் கற்களின் எண்ணிக்கை மற்றும் கல்லின் அளவு கண்டறியப்படுகின்றது. இ ஆர் சி பி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இரைப்பை குடல் உள்நோக்கி ஒரு பக்க உள்நோக்கி ஆகும். இதனால் பித்த குழாய் முன் சிறு குடலில் திறக்கும் இடமான ஆம்புலா என்ற இடத்தை சரியாக பார்க்க முடிவதால் அறுவை சிகிச்சையும் நன்றாக செய்ய இயலும். பொதுவாக இ ஆர் சி பி சிகிச்சை முறை பொது மயக்கத்தில் செய்யப்படுகின்றது. பொது மயக்கத்திற்கு பின் நோயாளி ஒரு பக்கமாக படுக்க வைக்கப்பட்டு உள்நோக்கி ஆனது முன் சிறு குடலின் இரண்டாம் பகுதி வரை செலுத்தப்பட்டு ஆம்புலா என்ற பகுதி கண்டறியப்படுகின்றது. ஆம்புலா பகுதி கண்டறியப்பட்ட பின் உள்நோக்கியின் குறிப்பிட்ட பகுதி வழியாக வழிகாட்டி கம்பி செலுத்தப்பட்டு அது ஆம்புலா வழியாக பித்த குழாய்க்கு செலுத்தப்படுகின்றது. இந்த வழிகாட்டி கம்பி பித்தக் குழாய்க்கு போவதை உறுதி செய்ய சியாம் என்னும் நேரடி எக்ஸ்ரே கருவி உதவியாக இருக்கும் வழிகாட்டி கம்பி பித்த குழாயில் இருப்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின் ஸ்பின்ட்ரோடோம் என்னும் கருவி மூலம் ஆம்பூலாவின் வாய் பகுதி விரிவாக்கப்படுகின்றது. இதற்கு பின் கேனுலா என்னும் நுண்ணிய குழாய் மூலம் மாறுப்படுத்தும் திரவம் பித்தக் குழாய்க்குள்  செலுத்தப்பட்டு, பித்தக் குழாயும், பித்த குழாயினுள் இருக்கும் கற்கள் பற்றியும் தெரிந்து கொள்ளப்படுகின்றது. இதில் கற்களின் அளவு எண்ணிக்கை மற்றும் தன்மை பற்றி கண்டறியப்படுகின்றது. எம் ஆர் சி பி பரிசோதனையின் போது கிடைக்கும் தகவல்கள் மிக முக்கியமானவை ஆகும். ஏனெனில் இ ஆர் சி பி சிகிச்சை முறை இந்த நோயாளிக்கு உகந்ததா என்பதை எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.

அத்துடன் ஒன்று அல்லது இரண்டு பித்த குழாய் கற்கள் இருந்தால்          இ ஆர் சி பி சிகிச்சை முறையில் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா? என்பதை கண்டறிய உதவியாக இருக்கும். பெரிய பித்த குழாய் கற்கள் குறிப்பாக 10 மில்லி மீட்டருக்கு மேலாக இருந்தால் அது இ ஆர் சி பி சிகிச்சை முறையில் ஆம்புலா மூலம் வராவிட்டால் பலூன் ஸ்பின்ரோ பிளாஸ்டி என்ற செயல்முறை மூலம் ஆம்பூலா விரிவுபடுத்தப்பட்டு பெரிய கற்களும், அகற்ற உதவியாக இருக்கும். இவ்வாறு அகற்றப்பட்ட கற்கள் முன் சிறு குடலில் விடப்பட்டு அவை மலம் வழியாக வெளியேறுகின்றன. சில சமயங்களில் பித்த குழாய் கல்லின் அளவு 15 மில்லி மீட்டருக்கு அதிகமாக இருந்தால் அவற்றை லித்தோரிப்ட்டர் என்ற கருவி மூலம் உடைத்து பின் வெளியேற்றப்படுகின்றது. லித்தோரிப்ட்டர் என்னும் கருவியில் பலவிதங்கள் உள்ளன.,

குறிப்பாக மெக்கானிக்கல் லித்தோரிப்ட்டர், லேசர் லித்தோரிப்ட்டர் மற்றும் ஹைட்ராலிக் லித்தோரிப்ட்டர் குறிப்பிடத்தக்கவை. எனவே இஆர் சி பி சிகிச்சை முறையின்போது பக்க உள்நோக்கி, முன் சிறு குடலின் இரண்டாம் பகுதியை அடைந்தவுடன் கம்பி வழிகாட்டி பித்தக் குழாய்க்குள் செலுத்தப்பட்டு கேனுலா என்னும் சிறு குழாய் மூலம் மாறுபடும் திரவம் செலுத்தி கல்லின் தன்மை கண்டறியப்படுகின்றது. கல்லின் அளவைப் பொறுத்து ஆம்புலா என்னும் பித்த குழாயின் வாய்ப்பகுதியை விரிவு படுத்துவதோடு தேவைப்பட்டால் பித்தக் குழாய் கற்களும் உடைக்கப்படுகின்றன. இதற்குப்பின் இதற்கென்று வடிவமைக்கப்பட்ட பலூன் மூலம் பித்தக் குழாய் கற்கள் முன் சிறு குடலினுள்  வெளியேற்றப்படுகின்றது. அதிக கற்கள் இருந்தால் பலமுறை இந்த பலூன் பயன்படுத்தி கற்கள் அகற்றப்படுகின்றன. முடிவில் அக்குலுஷன் கொலஞ்சியோகிராம் என்ற பரிசோதனை மூலம் போதிய அளவு மாறுப்படும் திரவம் பித்த குழாயினுள் செலுத்தி அனைத்து கற்களும் வெளியேற்றப்பட்டனவா என்பது உறுதி செய்யப்படுகிறது. எல்லா கற்களும் வெளியேற்றப்பட்ட பின் பிளாஸ்டிக்காலான பித்தக்குழாய் வடிக்குழாய் ஒன்று பொருத்தப்படுகின்றது. இதன் மூலம் பித்த குழாயில் உள்ள பித்தம் சரியாக வடிவதற்கு உதவுவதோடு ஆம்புலா பகுதியில் ஏற்படும் வீக்கத்தினால் பித்தக் குழாயில் பித்த நீர் தேங்காமல் இருப்பதற்கு உதவுகின்றது.

அத்துடன்., பித்தக்குழாயில் பித்த குழாய் வடிக்குழாய் பொருத்துவதால், லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சையில் சில சமயங்களில் பித்த குழாய் இருக்கும் இடத்தை அதன் உள்ளிருக்கும் பித்த குழாய் வடி குழாய் நிலையை பொறுத்து உறுதிப்படுத்தலாம். பித்த குழாய் வடிக் குழாயில் நேராகவும் வளைந்தும் இருக்கலாம்.  வளைந்திருக்கும் பித்தக் குழாய் வடிக்குழாய் பன்றியின் வால் வடிவத்தை போல் இருப்பதால் பித்தக் குழாயில் இருந்து தானாக வெளியேறாமல் இருக்க உதவுகின்றது.

இ ஆர் சி பி சிகிச்சைக்கு பின் லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை அல்லது திறந்த பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பின்னரே செய்யப்படுகின்றது. அவ்வாறு செய்யப்படுவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. அவையாவன.,

  • குடலினுள் இருக்கும் காற்று குறைய ஒரு நாள் ஆகலாம்.
  • நோயாளியின் பொதுநலத்தை மேம்படுத்துதல்.
  • கணைய அழற்சி பற்றி ஆராய்தல்.
  • மஞ்சள் காமாலை பற்றி ஆராய்தல்.
  • வேறு உறுப்புகளின் முன்னேற்றம் பற்றிய ஆராய்தல்
  • இ ஆர் சி பி சம்பந்தப்பட்ட கணைய அழற்சி பற்றி ஆராய்தல்

1)குடலினுள் இருக்கும் காற்று

ஜீரண மண்டலம் என்பது வாயில் ஆரம்பித்து ஆசன வாயுடன் முடிவடைகிறது. இதன் நீளம் 9 மீட்டர் ஆகும். பொதுவாக எதுவும் சாப்பிடாமல் இருந்தால் குடலினுள் பெரிதாக எதுவும் இருப்பதில்லை ஆனால் எண்டோஸ்கோபி செயல்முறையின் போது காற்று அல்லது கார்பன் டை ஆக்சைடு செலுத்தப்பட்டு குடல் விரிவடைந்த பின்னரே எந்த செயல்முறையும் செய்ய முடியும். குறிப்பாக இ ஆர் சி பி போன்ற சிகிச்சை  எண்டோஸ்கோபி செயல்முறை சமயங்களில் அதிக நேரம் செய்யும்போது அதிக காற்று குடலினுள் தேங்கி குடலின் வீக்கத்தை அதிகரிக்கிறது. இந்த வீக்கத்தால் வயிற்றிலும்  வீக்கம் அதிகமாகி வயிற்றினுள்  செய்யப்படும் அறுவை சிகிச்சை சில சமயங்களில் கடினமாக இருக்கலாம். இவ்வாறு செலுத்தப்பட்ட காற்று பொதுவாக 24 மணி நேரத்திற்குள் வெளியேறிவிடும். குறிப்பாக கார்பன் டை ஆக்சைடு பயன்படுத்தினால் உடலினுள் உள்ள காற்று இன்னும் வேகமாக வெளியேறிவிடும் எனவே இஆர் சி பி சிகிச்சைக்கு பின் 24 மணி நேரத்திற்கு பின்பு சம்பந்தப்பட்ட வயிற்று அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.

2)நோயாளியின் பொதுநலத்தை மேம்படுத்துதல்

பித்தக்குழாய் கற்கள் பாதிக்கப்பட்ட சிலருக்கு நுண்ணுயிரின் தாக்கம் அதிகமாகி பொதுநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம். இத்தருணத்தில்                 இ ஆர் சி பி சிகிச்சையின் போது, பித்தக் குழாய் கற்கள் அகற்றப்பட்டு பித்தக் குழாய் வடிகுழாய் பொருத்தப்படுகிறது. இந்த எண்டோஸ்கோபி சிகிச்சை முறை பித்தக் குழாயின் நுண்ணுயிரி தாக்கத்தை குறைப்பதோடு, பொதுநலத்திலும் முன்னேற்றத்தை உருவாக்கும். பொதுநலம் பாதிக்கப்பட்டு இருந்தால் அதிகம் முன்னேற்றம் வர சில நாட்கள் ஆகலாம். எனவே, பொதுநலத்தில் முன்னேற்றம் வரும் வரை அடுத்த அறுவை சிகிச்சைக்கு பொறுத்து இருத்தல் நல்லது.

3) கணைய அழற்சி  பற்றி ஆராய்தல்

பித்த குழாய் கல்லால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு கணைய அழற்சியும் சேர்ந்து இருக்கலாம். இ ஆர் சி பி சிகிச்சைக்கு பின் கணைய அழற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் லேப்ராஸ்கோபி பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். இந்த முன்னேற்றத்தை கண்டறிய சில நாட்கள் தேவைப்படுவதால் அறுவை சிகிச்சையும் ஒரு சில நாட்களுக்குப் பின்னரே பரிந்துரைக்கப்படுகின்றன.

4)மஞ்சள் காமாலை பற்றி ஆராய்தல்

பொதுவாக பித்துக்குழாய் கல்லுடன் மஞ்சள் காமாலையும் சேர்ந்தே இருக்கும். ஆனால் மஞ்சள் காமாலையின் அளவு 10 மில்லி கிராம் சதவீதத்திற்கு மேல் போவது அரிது. மஞ்சள் காமாலையின் அளவு 10 மில்லி கிராம் சதவீதத்திற்கு மேல் இருக்கும்  ஆனால் இ ஆர் சி பி சிகிச்சைக்கு சில நாட்களுக்குப் பின் தான்  மஞ்சள் காமாலை குறையும் என்பதால், பித்தப்பை அறுவை சிகிச்சை சில நாட்கள் கழித்து மேற்கொள்ளப்படுகிறது.

5)வேறு உறுப்புகளின் முன்னேற்றம் பற்றிய அறிதல்

பித்தக்குழாய் கல்லுடன் நுண்ணுயிரின் தாக்கம் அதிகமாக இருந்தால் மற்ற உறுப்புக்களும் பாதிக்கப்படலாம். இத்தருணத்தில் நோயாளியின் பொது நலனை மேம்படுத்தி பின்னரே இ ஆர் சி பி சிகிச்சை செய்யப்படுகின்றது. இச்சிகிச்சைக்குப் பின் உரிய நேரம் கொடுக்கப்பட்டு மற்ற உறுப்புகள் சீரடைய ஆரம்பித்த பின்னரே பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்படுகின்றது.

6) ஆர் சி பி சம்பந்தப்பட்ட கணைய அழற்சி

இ ஆர் சி பி சிகிச்சைக்குப் பின் சுமார் பத்து சதவீத நோயாளிகளுக்கு கணைய அழற்சி  வரலாம். இ ஆர் சி பி சிகிச்சையின் போது வழிகாட்டி கம்பி கணைய குழாயினுள் நுழைவதே கணைய அழற்சிக்கு ஒரு முக்கிய காரணம். குறிப்பாக., பித்த குழாயின் வாய்ப்பகுதியில் அழுத்தமாக தேங்கி இருக்கும் பித்த குழாய் கல்லால் கணைய அழற்சி உருவாக ஒரு காரணமாகின்றது. பொதுவாக இ ஆர் சி பி சிகிச்சைக்கு பின் வயிற்றின் மேல் பகுதியில் வலி அதிகமாகவதோடு இரத்த பரிசோதனையில்  அமைலேஸ்  மற்றும் லைஃபேஸ் அளவு அதிகமாக இருக்கும். இத்தருணத்தில்., கணைய அழற்சி ஓரளவு சரியான பின்னரே பித்தப்பை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பின் எம் ஆர் சி பி பரிசோதனை மூலம் பித்தக் குழாயில் கற்கள் தேங்கி உள்ளனவா என்பதை கண்டறிதல் வேண்டும். பித்த குழாயில் கற்களின் தேக்கம் இல்லாமல் இருந்தால் பித்த குழாய் வடிக் குழாயானது பித்தப்பை அறுவை சிகிச்சைக்கு ஆறு வாரத்திற்கு பின் அகற்றப்படுகின்றது .

பித்தப்பை கல்லுடன் பித்தக் குழாயில் கல் இருப்பவர்களுக்கு இ ஆர் சி பி மூலம் பித்தக்குழாய் கற்களும் லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பையும் அகற்றப்படுகிறது, தொடர் நுண்ணுயிரியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இ ஆர் சி பி சிகிச்சையின் போது பித்தக் குழாய் வடிக்குழாய் பொருத்தப்படுகின்றன. இதனால் சில சமயங்களில் லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையின் போது பித்தக் குழாயை கண்டறிவதில் உள்ள சிரமத்தை குறைப்பதோடு, பித்தக்குழாய்க்கு பாதிப்பு வராமலும் அறுவை சிகிச்சையை முடிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


No Comments posted
Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Add Comment *

Name*

Email*