blog-post-image

திறந்த பித்தப்பை அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் டி குழாய் பொருத்துதல்

Posted on 2025-05-20 19:57:58 by Dr. Sathish

திறந்த பித்தப்பை அறுவை சிகிச்சை பித்த குழாய் கற்கள் அகற்றுதல் மற்றும் டி குழாய் பொருத்துதல்

பித்தப்பை கல்லுடன் பித்தக் குழாயில் கற்கள் இருந்து அது இ ஆர் சி பி சிகிச்சை மூலம் அகற்றபட முடியாவிட்டால் திறந்த பித்தப்பை அகற்றும்  அறுவை சிகிச்சையுடன் பித்தக் குழாய் கற்கள் அகற்றுதலும் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக இரைப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தாலும் அல்லது முன் சிறு குடல் அல்சர் வியாதியினால் இரைப்பையின் வாய் பகுதியில்  சுருக்கம் ஏற்பட்டு இருந்தாலும் இ ஆர் சி பி சிகிச்சை முறை முடியாமல் போய்விடும். இத்தருணத்தில்  திறந்த அறுவை சிகிச்சை மூலம் இரண்டு சிகிச்சைகளும் செய்து முடிக்கப்படுகின்றன. மேலும் பித்த குழாயில் பெரிய கற்கள் இருந்தால் இ ஆர் சி பி சிகிச்சை கடினமாகி விடுவதால் திறந்த அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டு மயக்க மருந்து மருத்துவரின் ஆலோசனை பெறப்படுகிறது.

முழு மயக்கம் அல்லது முதுகெலும்பு வழி  மயக்கம் வாயிலாக வயிறு திறக்கப்படுகிறது. பித்தப்பை தமனியும் பித்தப்பை குழாயும் பிரிக்கப்பட்டு பித்தப்பையும் அகற்றப்படுகிறது. பித்தக் குழாய் கண்டறியப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டு இரண்டு தசைனார்களின் இடையில் இரண்டு அல்லது மூன்று சென்டிமீட்டர் நீளத்திற்கு பித்தக் குழாய் திறக்கப்படுகிறது. இதற்குப் பின் பித்த குழாயில் உள்ள கற்கள் அனைத்தும் அகற்றப்படுகின்றன. அனைத்து கற்களும் அகற்றப்பட்டனவா என்பதை தொடர் எக்ஸ்ட்ரே பரிசோதனை மூலமாகவோ அல்லது கொலஞ்சியோஸ்கோப்பி என்ற பித்த குழாய் உள்நோக்கி மூலமாகவோ உறுதிப்படுத்தப்படுகின்றது. பித்த குழாய் கற்கள் ஏதாவது மிஞ்சி  இருந்தால் கொலஞ்சியோஸ்கோப்பி மூலம் அகற்றி விடலாம். எல்லா பித்த குழாய் கற்களும் அகற்றப்பட்ட பின் பித்த குழாய் சுத்தமான நீரால் சுத்தப்படுத்தப்படுகிறது. இத்துடன்., அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்திலும் இரத்த கசிவு இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. முடிவில் டி வடிவிலான டி குழாய் பித்த குழாயில் பொருத்தப்பட்டு பித்த குழாய் தசை நார்களால் மூடப்படுகிறது. மூடப்பட்ட பித்த குழாயில் பித்தகசிவு இல்லை என்பதும் உறுதிப்படுத்தபட்ட பின்  டி குழாயானது சிறு துவாரம் வழியாக வயிற்றின்வெளியே கொண்டுவரப்படுகிறது. இத்துடன் வயிற்றினுள் வடிக்கால் குழாய் ஒன்றும் பொருத்தப்படுகிறது. பொதுவாக வடிகால் குழாய் 3 அல்லது 4 நாட்களுக்குப் பின் அகற்றப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு ஆறு வாரத்திற்கு பின்பு டி குழாய் வழியாக மாறுபடும் திரவம் செலுத்தப்பட்டு பித்தக் குழாயில் கற்கள் ஏதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. மாற்றாக எம் ஆர் சி டி பரிசோதனையும் பித்த குழாய் கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் .பித்தக்குழாயில் கற்கள் எதுவும் இல்லாவிட்டால் டி குழாய் அகற்றப்பட்டு அறுவை சிகிச்சை நிறைவு பெறுகிறது.


No Comments posted
Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Add Comment *

Name*

Email*